பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசுபொருளாகியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவன், ஒன்பதாம் வகுப்பில் வன்முறையில் ஈடுபடுகிறான். அவனை உருவாக்கியதில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பங்கும் பொறுப்பும் இல்லையா?

மாணவர்கள், பாலினப் பாகுபாடின்றி, பெருமளவில் மன உளைச்சலுக்குள்ளாவது உண்மை. வளரிளம் பருவம் அன்புக்காக, புரிதலுக்காக, அரவணைப்புக்காக, உதவிக்காகத் தவிக்கும் பருவம். சில கட்டுப்பாடுகளால், கலாச்சாரக் காரணங்களால், நம் சமுதாயத்தில் பெண் குழந்தைகள் வன்முறைகளில் அதிகமாக ஈடுபடாவிட்டாலும், அவர்களுக்கும் இதுபோன்ற உளவியல் சிக்கல்கள் ஏராளமாக இருக்கின்றன.

வன்முறைகளில் ஈடுபடும் அல்லது அதில் தள்ளப்படும் குழந்தைகளின் சூழலைப் புரிந்துகொள்ளும் நிலை பள்ளிகளில் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளிகள் சமுதாயத்திலிருந்து முழுக்க விலகிக் கிடக்கின்றன; அந்நியப்பட்டுக் கிடக்கின்றன.

பெற்றோர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலை செய்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்களிடமிருந்துதான் உதவி வர வேண்டும் என்று சொன்னால், அதற்கான நேரமோ, புரிதலோ, சூழலோ பெற்றோர்களுக்குக் கிடையாது.

குழந்தைகளின் வாழிடங்களை நேரில் சென்று பெரும்பாலான ஆசிரியர்கள் பார்த்ததே கிடையாது. குழந்தைகள் அவர்களுடன் பேசுவதற்கு, அவர்கள் மனதை உலுக்கிக்கொண்டிருக்கும் கேள்விகளைக் கேட்பதற்கு நேரமே இல்லை. அந்த அளவுக்கு ஆசிரியர் – மாணவர் உறவும் இல்லை.

நாற்பது – ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆசிரியர்கள் அதே கிராமத்தில் தங்கியிருப்பார்கள். மாலை நேரத்தில் மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் பேசுவார்கள். இன்று அந்த உறவு உடைந்தே விட்டது.

ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களை இழிவுபடுத்தாமல், பலர் முன்னிலையில் அவமானப்படுத்தாமல், தனியே அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்சினையை அறிந்துகொள்ள முயல வேண்டும். கனிவுடன் பேச ஆரம்பித்தால், இந்த இடைவெளி பெரிய அளவில் தவிர்க்கப்படும்.

நமது பள்ளிகளில் குழந்தைகளின் உளவியல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு, அதற்கான உளவியல் ஆலோசனை கொடுப்பதற்கு யாரும் இல்லை.

ஆசிரியர்கள்தான் ஆலோசகர்களாக, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது நான்கு மணிக்கு மேல் இருந்து மாணவர்களிடம் பேச வேண்டும். தன்னுடைய கைபேசி எண்ணை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களிடம் கொடுக்க வேண்டும். ‘உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னிடம் கேட்கலாம்’ என்ற நம்பிக்கையை அவர்களிடம் உருவாக்க வேண்டும்.

பெரும்பாலான மாணவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள்தான் ‘ரோல் மாடல்’ என்று சொல்லப்படுகிறது. சினிமாவில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்தான் நாயகர்கள். சரி; இவர்களுக்கான மாற்று யார்? ஆசிரியர்கள் பல்வேறுபட்ட முன்னுதாரண மனிதர்களைப் பற்றித் தொடர்ந்து பேச வேண்டும்.

தவறு செய்யும் மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும்; அப்போதுதான் அவன் திருந்துவான் என்ற வாதங்களைக் கேட்கிறோம். மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்தால் அவனைக் கிட்டத்தட்ட குற்றவாளி ஆக்கிவிடுவோம்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்களை என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ், (N.S.S.), சமூக சேவை போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

> இது, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வே.வசந்தி தேவி எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!