மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு டேக்-ஆஃப் ஆகியுள்ள இந்திய வீரர்களின் படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வரும் ஜூலை 1 முதல் 17 வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளது.
விராட் கோலி, புஜாரா, பும்ரா, ஜடேஜா, ஷமி, சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். இந்தத் தொடரில் இந்தியா விளையாடவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டியாகும்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் முடிந்ததும் இங்கிலாந்து செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணியை வழிநடத்தவுள்ளார். இது தவிர இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவுள்ள மேலும் சில வீரர்களும் இங்கிலாந்து புறப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.