ராஜ்கோட்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் அவேஷ் கான் தனக்கு பயிற்சியாளர் ராகுல் திராவிட் மிகவும் உறுதுணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருந்த அவேஷ் கான் நான்கு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்தப் போட்டி முடிந்தவுடன் அவேஷ் கான் கூறுகையில், “நான்கு போட்டிகளிலும் இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. எனவே, பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் இந்தப் பாராட்டுக்குரியவர். அனைவருக்குமே போதுமான வாய்ப்புகளை அவர் வழங்குகிறார்.
ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றால், அந்த வீரரை அணியில் இருந்து நீக்குவதில்லை. ஒன்றிரெண்டு போட்டிகளில் ஒருவரது ஆட்டத்திறனை தீர்மானித்துவிட முடியாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். எனவே, ஒவ்வொரு வீரருமே தங்களை நிரூபிப்பதற்கு போதுமான வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
ஆம், என்மீது அழுத்தம் இருந்ததுதான். கடந்த மூன்று போட்டிகளில் நான் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. ஆனால், எனக்கு ராகுல் திராவிட்டும், அணி நிர்வாகமும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தது. அதனால் நான்கு விக்கெட்டுகளை ஒரே போட்டியில் வீழ்த்த முடிந்தது. வெள்ளிக்கிழமை என் அப்பாவின் பிறந்தநாள். அவருக்கான பரிசாகவும் இதைப் பார்க்கிறேன்” என்று மகிழ்ச்சியாக குறிப்பிட்டார்