மும்பை: 2023 – 2027 வரையிலான ஐபிஎல் மீடியா உரிமத் தொகை ரூ.48,390 கோடியை எப்படி அணிகள், வீரர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி, டிஜிட்டல், பிரத்யேக போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்திற்கான ஏலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் ரூ.23,758 கோடிக்கும் பெற்றுள்ளன. இது தவிர வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் ரூ.1,057 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கான ஒட்டுமொத்த விலை ரூ.48,390 கோடி.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த ரூ.48,390 கோடியை ஐபிஎல் கிரிக்கெட் அணிகள், வீரர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்தளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐபிஎல் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு தலா ரூ.3000 கோடி வழங்கப்படும் எனத் தெரிகிறது. புதிதாக இணைந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இன்னும் சில காலம் அதற்கு காத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
மீதமுள்ள பாதி தொகை வீரர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதன்படி உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு தோராயமாக ரூ.6,290 கோடியும், மாநில சங்கங்களுக்கு தோராயமாக ரூ.16,936 கோடியும் கிடைக்கும் எனத் தெரிகிறது.