புதுடெல்லி: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியவர் கவுதம் கம்பீர். 40 வயதான அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அது தவிர 2019 வாக்கில் பாஜகவில் இணைந்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, “2022 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதற்குள் இதைச் சொல்வது கொஞ்சம் சவாலானது. அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே விளையாடுவது போதாது. அணியில் விளையாடும் டாப் 7 வீரர்களில் ஒருவர் பந்து வீச வேண்டும் என இந்திய அணி விரும்பும். அக்சர் படேல் ஏழாவது வீரராக விளையாடினால் ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணியில் குறைவாக இருப்பது போல ஆகிவிடும்.

அந்த மாதிரியான சூழலில் கார்த்திக்கை விட தீபக் ஹூடா போன்ற இளம் வீரருக்கு நான் வாய்ப்பு வழங்குவேன். கே.எல்.ராகுல், ரோகித், சூர்யகுமார் யாதவ், கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் வந்துவிட்டால் அது மேலும் சவாலாகிவிடும்.

ராகுல், ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களாக விளையாடுவார்கள். அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அடுத்ததாக ஹர்திக் பாண்டியா, பந்த், ஹூடா, ஜடேஜா விளையாடுவர். மீதமுள்ள ஒரு பேட்ஸ்மேன் இடத்தில் தான் அவர் விளையாட வேண்டி இருக்கும். அது அணியை தேர்வு செய்பவர்களின் கைகளில் தான் உள்ளது. அவரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அணியின் முதல்நிலை வீரர்களில் ஒருவரை டிராப் செய்ய வேண்டி இருக்கும்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் அக்சர் படேலுக்கு அடுத்ததாக களம் கண்டது கூட எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. அக்சருக்கு முன்னதாக கார்த்திக் களம் கண்டிருக்க வேண்டும் என நான் விரும்பினேன்” என கம்பீர் கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஃபினிஷர் ரோலுக்கு தினேஷ் கார்த்திக் சரியான சாய்ஸ் என சொல்லி இருந்தனர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். ஆனால் அதிலிருந்து முற்றிலுமாக மாறி இருக்கிறது கம்பீரின் கருத்து.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!