ஃபின்லாந்தில் நடந்த குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஃபின்லாந்தில் பெய்த மழைக்காரணமாக ஈரமான சூழ்நிலைகளுக்கு நடுவே 86.69 மீ ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தன் வசப்படுத்தினார். முன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரத் தன்மையால் காயம் அடைவதில் இருந்து தப்பித்தார். மூன்றாவது சுற்றில் அவர் வழுக்கி விழுந்தார். எனினும் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் தப்பித்தார்.
இந்தப் போட்டியில் டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
முன்னதாக, சில தினங்கள் முன் பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். முன்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை அந்தப் போட்டியில் முறியடித்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக தன்னை தீவிரமாகத் தயார்படுத்தி வரும் நீரஜ், இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தனது திறனை நிரூபித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 90மீ தூரம் எறிவதை இலக்காக கொண்டு செயல்படவும் துவங்கியுள்ளார். அதற்கேற்ப அடுத்ததாக ஜூன் 30 ஆம் தேதி டயமண்ட் லீக்கின் ஸ்டாக்ஹோம் லெக்கில் பங்கேற்கிறார் நீரஜ்.