சென்னை: பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்கள் என சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள், நிபுணர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு,
தலைமைத்துவம், மேலாண்மை ஆகிய தலைப்புகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதற்கேற்ப துறை சார்ந்த அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துணை இயக்குநர்கள் மற்றும் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அலுவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூன் 19 முதல் 25-ம் தேதி வரை 2 கட்டங்களாக மதுரையில் நடத்தப்பட உள்ளது.
இவற்றில் எண்ணும், எழுத்தும் இயக்கம், கற்றல் விளைவுகள், தேசிய அடைவுத் திறன் பகுப்பாய்வு, எமிஸ் வலைத்தளம் மற்றும் பள்ளி பார்வை உள்ளிட்ட விவகாரங்கள் சார்ந்து பயிற்சி வழங்கப்படும். இதற்கான கால அட்டவணை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.