காந்திநகர்: எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் நேற்று (ஜூன்- 1) தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது: “அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்விதான் அடித்தளம். தேசிய கல்விக் கொள்கை 2020 அனைத்துத்துறை மேம்பாட்டையும், அனைவருக்கும் அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் திட்டமாகும். நாம் தற்போது அமிர்த காலத்தில் இருக்கிறோம்.

உலக நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் அறிவுப் பொருளாதாரமாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கு அடுத்து வரவுள்ள 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. வீடு, தேசம் மட்டுமின்றி உலகத்தின் மீதான பொறுப்புணர்வும் நமக்கு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராகும் நாம், கல்வி, திறன் மற்றும் சுற்றுச்சூழலை வலுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020, ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான கல்வி, ஆசிரியர் பயிற்சி, வயது வந்தோருக்கான கல்வி, பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது, மற்றும் தாய்மொழி வழிக்கல்விக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும். பிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான மாதிரியை உருவாக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் கல்வி அமைப்புகள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல், கோவா மாநில முதல்வர் ப்ரமோத் சவாந்த், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், புதிய தேசிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!