பெங்களூரு: ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் சதம் பதிவு செய்து அசத்தியுள்ளார் மேற்கு வங்க மாநில விளையாட்டு துறை இணை அமைச்சர் மனோஜ் திவாரி. முதல்தர கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள 28-வது சதம் இது.
பெங்களுருவில் நடப்பு ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் ஜார்கண்ட் மற்றும் வங்காள கிரிக்கெட் அணிகள் விளையாடின. ஜார்கண்ட் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்காள அணி முதல் இன்னிங்ஸில் 773 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் 9 பேட்ஸ்மேன்கள் அரை சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார்கள். இதில் மனோஜ் திவாரி 73 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் மனோஜ் திவாரி, 185 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து அசத்தினார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த 28-வது சதம் இது. அதை தவான் ஸ்டைலில் கொண்டாடி இருந்தார் திவாரி.
2021 பிப்ரவரி வாக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஷிபுர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தற்போது அவர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் விளையாட்டுத் துறையில் இணை அமைச்சராக உள்ளார். அதே நேரத்தில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 12 ஒருநா மற்றும் 3 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.