அமேசான் ஷூ வாங்குவதற்கு முன்னர் விர்ச்சுவல் முறையில் பயனர்கள் ஷூவை போட்டு பார்த்து வாங்கும் வகையிலான புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது.
முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் கடைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும் நிலை இருந்தது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அவரவர் இருக்கும் இடம் தேடி பொருட்களை வழங்கி வருகின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். அதில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்று அமேசான். இதில் கிடைக்காதது என்று எதுவுமே இல்லை. சகலமும் கிடைக்கும்.
இருந்தாலும் காலணி, பேண்ட், சட்டை போன்றவற்றை போட்டு பார்த்து வாங்கும் வசதி இ-காமர்ஸ் நிறுவனங்களில் இல்லை. அதனால் சமயங்களில் இந்த பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு அளவு சின்னதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தால் அதை ரிட்டர்ன் செய்ய வேண்டி இருக்கும். இந்த சிக்கலை டிஜிட்டல் முறையில் பொருட்களை வாங்கும் பயனர்களின் பெரும்பாலானோர் எதிர் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அமேசான். அதன் மூலம் பயனர்கள் அமேசான் தளத்தில் ஷூ வாங்குவதற்கு முன்னர் அதனை விர்ச்சுவல் முறையில் பொருந்தும் வகையில் உள்ளதா என்பதை சரிபார்த்து வாங்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு இந்த அம்சம் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களில் மட்டுமே இயங்கி வருகிறது. இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் இந்த அம்சம் விரிவு செய்யப்படலாம்.
அமேசான் செயலியில் பயன்கள் தங்களுக்கு பிடித்த ஷூவை ‘Virtual Try-On’ பட்டனை டேப் செய்து, தங்கள் பாதங்கள் தெரியும் வகையில் கேமராவை வைத்தால் தங்களது கால்களில் அந்த ஷூவை அணிந்தது போல மொபைல் போன் ஸ்க்ரீனில் தெரியும் என தெரிகிறது. அதை பயனர்கள் பல்வேறு ஆங்கிளில் பார்க்கலாம் என தெரிகிறது. ஷூவின் வண்ணங்களை மாற்றும் வசதியும் இதில் உள்ளது. இதை நண்பர்களுடனும் ஷேர் செய்யும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.