சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 170 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1-ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணியில் சுமார் 80,000ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு சில தனியார் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இதனால், சென்னை உட்பட சில மாவட்ட பகுதிகளில் திருத்துதல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கல்வித் துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இந்த நிலையில், திருத்துதல் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாயிலாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கணிசமான ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணியில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வந்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே திட்டமிட்ட தேதிகளில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டி இருப்பதால், மதிப்பீட்டு பணிகளில் ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதற்கேற்ப, அந்தந்த பாட ஆசிரியர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனே பணி விடுவிப்பு செய்ய வேண்டும். இதை மீறினால், பள்ளிதலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!