புது டெல்லி: பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு தீர்வு காண உதவும் வகையில் சேஃப்சிட்டி (Safecity) என்ற செயலியை வடிவமைத்தமைக்காக மும்பையைச் சேர்ந்த எல்சா மரியா டி சில்வா என்பவர் வேர்ல்ட் ஜஸ்டிஸ் சேலஞ்ச் (World Justice Challenge) விருதை வென்றுள்ளார்.
உலக அளவில் சட்ட விதிகளை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வருகிறது வேர்ல்ட் ஜஸ்டிஸ் மன்றம். ஆண்டுதோறும் உலக அளவில் சட்ட விதிகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உதவி வரும் அமைப்புகளின் முயற்சியை அடையாளம் காணவும், அந்தப் பணியை அவர்கள் முன்னெடுத்து செல்லும் நோக்கத்திலும் நடத்தப்பட்டு வருகிறது வேர்ல்ட் ஜஸ்டிஸ் சேலஞ்ச் போட்டி.
இதில்தான் சேஃப்சிட்டி (Safecity) செயலிக்காக விருதை வென்றுள்ளார் டி சில்வா. சுமார் 118 நாடுகளை சேர்ந்த 305 விண்ணப்பங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதில் தான் விருதை வென்றுள்ளது சேஃப்சிட்டி.
ரெட் டாட் பவுண்டேஷன் நிறுவனரான அவருக்கு சம உரிமை (Equal Rights and Non-Discrimination) பிரிவின் கீழ் விருது கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-இல் டெல்லியில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் குற்றத்திற்கு பிறகு இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான சமூகத்திற்காக, சமூகத்திற்கு அதில் உள்ள அனைவருக்கும் பங்கு உள்ளது என்ற வகையில் இந்த செயலி இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான குற்றங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இதில் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் மட்டுமல்லாது, அதைக் கண்ணால் பார்த்த சாட்சிகளும் அந்தக் குற்றச் செயல் தொடர்பாக இந்த செயலியில் பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு செய்யபப்டும் குற்றச் செயலின் நேரம், தேதி, இருப்பிடம் என அனைத்து விவரகங்ளும் இதில் பதிவாகிறது. அதை கிரவுட்மேப் மூலம் பார்க்கலாம்.
உதாரணமாக, புதுச்சேரி நகரப்பகுதியில் இந்த செயலியை பயன்படுத்தும் பயனர் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பாக இந்தச் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றங்களின் எண்ணிக்கை என்ன பாதிக்கப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பதையும் இந்த கிரவுட்மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இப்படி குற்றம் தொடர்பான தகவல்களை மொத்தமாக திரட்டி மக்கள், காவல்துறை, சமூகம், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்து கொள்கைகளை மேற்கொள்வோரின் கவனத்திற்கு செல்கிறது இந்த சேஃப்சிட்டி செயலி. அதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க விரும்புகிறது இந்த செயலி. மேலும் இந்த தரவுகள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.