Last Updated : 15 May, 2022 06:13 AM
Published : 15 May 2022 06:13 AM
Last Updated : 15 May 2022 06:13 AM

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி (ஐடிஐ) பயிலும் மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு வழங்குவதற்காக சைக்கிள்கள் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் 3-ம் தேதி ஒப்பந்தம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் தகுதியான சைக்கிள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்குழுவால், விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்து 3 மாதத்துக்குள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.