சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னைக்கு அருகிலுள்ள மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இனி ஒவ்வொரு முறையும் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறும். இந்த ஜோதி ஓட்டம் சதுரங்கம் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இம்முறை நேரமின்மை காரணமாக ஜோதி ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் எனவும், சுடர் பயணிக்கும் பாதை மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.