நம்மில் பலர் நினைப்பதுபோல் சரளமாக ஆங்கிலம் பேச இயலாமல் போவதற்கான காரணம் ஒருவருக்கு போதிய ஆங்கில சொல்வளம் (vocabulary) இல்லாமல் இருப்பது அல்ல. அதாவது ஆங்கிலத்தில் நிறைய சொற்களைத் தெரிந்து வைத்திருக்காமல் இருப்பது ஆங்கிலம் பேசுவதற்கான தடை அல்ல. ஓரளவு அடிப்படையான சொற்களைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலமாகவே தவறில்லாத எளிய ஆங்கில உடையாடலை மேற்கொண்டுவிட முடியும்.
ஆங்கிலம் பேசும்போது தடுமாறுவதற்கான காரணங்கள் பெரும்பாலும் நம் உளவியல் சார்ந்தவையே. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.
புதியவை குறித்த தயக்கம்: என்னதான் சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் கற்றுக்கொண்டாலும் ஆங்கிலம் பேசுவது என்பது நமக்குப் புதிய விஷயம்தான். அன்றாடம் தாய்மொழியில் பேசிப் பழகிய நமக்கு ஆங்கிலம் பேசுவது புதிய விஷயம்தான். புதிய விஷயங்களைத் தொடங்குவது குறித்த தயக்கம் ஆங்கிலம் பேசுவதில் ஏற்படும் தடுமாற்றத்தை விளைவிக்கும் முதல் காரணியாகிறது.
வசதிக்கு பழகிவிட்ட மனநிலை: தாய்மொழி அல்லது நாம் அன்றாடம் பேசும் நமக்கு நன்கு தெரிந்த மொழியில் பேசுவது வசதியானது. மனித மனம் எப்போதும் வசதிக்குப் பழக்கப்பட்டு அதையே பின்பற்றும் மனநிலை நிலைத்துவிடும் இயல்பைக் கொண்டது. இந்த வசதியின் எல்லைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களைப் பழக மனம் தயங்குகிறது.
நம்பிக்கை முக்கியம்: இதுபோன்ற ஆங்கிலம் பேசுவது தொடர்பான வேறு காரணங்களால் விளையும் தயக்கம், பதற்றம், பயம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவது அவசியமானது. முதலில் நம்மால் ஒரு விஷயத்தை நம் தாய்மொழியில் தெரிவிக்க முடிகிறதென்றால் ஆங்கிலத்திலும் அதைத் தெரிவிக்க முடியும் என்று மனதார நம்ப வேண்டும். அடுத்ததாக ஆங்கிலத்தில் பேசுவதால் விளையும் நன்மைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்கலாம்.
ஆங்கிலம் பேச முடியும் என்கிற தன்னம்பிக்கையும் ஆங்கிலம் பேசுவதன் நன்மைகள் குறித்த சிந்தனையும் ஆங்கிலம் பேசுவது குறித்த தயக்கங்களையும் மனத் தடைகளையும் களைவதற்கு மிகப் பெரிய பங்காற்ற முடியும்.
சரி இந்தத் தயக்கங்களைக் கடந்துவிட்டோம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டுவிட்டோம், இவற்றின் மூலமாக மட்டும் ஆங்கிலம் பேசிவிட முடியுமா? அதற்கென்று சில பயிற்சிகள் இருக்கின்றன.
நிலைக்கண்ணாடி பயிற்சி: வெற்றிகரமான சொற்பொழிவாளர்கள், அரசியல் கருத்தாளர்கள் உள்படப் பொது நிகழ்சிகளில் பேசும் பலரும் நிலைக்கண்ணாடியின் முன் நின்று தனக்குத் தானே பேசிப் பார்த்துப் பயிற்சி செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுவதற்கு இந்த வழிமுறை பெரிதும் உதவக் கூடும்.
காணொளிப் பதிவுப் பயிற்சி: அடுத்ததாக நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணொளிப் பதிவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசியதைத் திரும்பக் கேட்பதன் மூலம் என்னென்ன தவறு செய்கிறீர்கள், எங்கெங்கு எதற்கெல்லாம் தடுமாறுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தப் பிரச்சினைகளைக் களைய இது பெரிதும் உதவும்.
சப்டைட்டில் பயிற்சி: இன்று ஓடிடியில் சர்வதேசத் திரைப்படங்களையும் வலைத்தொடர்களையும் பார்க்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் படைப்புகளை ஆங்கில சப்டைட்டிலுடன்தான் பார்க்கிறோம். தமிழ்ப் படங்களும்கூட சப்டைட்டிலுடன் கிடைக்கின்றன. மொழி நமக்குத் தெரியும் என்றாலும் சப்டைட்டிலுடன் பாருங்கள். தமிழ் வாக்கியங்களை ஆங்கில சப்டைட்டிலில் பார்த்தவுடன் காணொளியைச் சற்று நிறுத்திவிட்டு அந்த ஆங்கில வரியை உரக்கச் சொல்லிப் பாருங்கள். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு இதுவும் உதவும்.
> இது, ச.கோபாலகிருஷ்ணன், எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்