சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வை முன்னிட்டு, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு வரும் 14, 15-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு)நடக்க உள்ளது. முதல் நாளில்எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், 2-ம் நாளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் நடக்கின்றன. இதற்காக சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 37 ஆயிரம் மாணவர்கள் டான்செட் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், தமிழக உயர்கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக அரசின் டான்செட் நுழைவுத் தேர்வை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துவித பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.