வேல்ஸ்: பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை உக்ரைன் அணி இழந்துள்ளது. ரஷ்யா படையெடுத்து உக்ரைன் மீது போரிட்டு வரும் நிலையில் அந்த அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்றிருந்தது.
வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரையில் FIFA கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 32 நாடுகள் இந்தத் தொடரில் விளையாடுகின்றன. இந்தத் தொடர் மொத்தம் 8 மைதானங்களில் நடைபெற உள்ளது. இதுவரையில் மொத்தம் 30 அணிகள் இந்தத் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் உலகக் கோப்பை தகுதிக்கான இரண்டாவது சுற்றில் விளையாடி இருந்தது உக்ரைன்.
அரையிறுதியில் ஸ்காட்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது உக்ரைன். இந்நிலையில், வேல்ஸ் அணிக்கு எதிரான 1-0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டியில் (நேற்று) ஆட்டத்தை இழந்தது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் எதிர்பாராத விதமாக தங்கள் அணியின் வலைக்குள் ஓன் (Own) கோல் பதிவு செய்தார் உக்ரைன் வீரர் Andriy Yarmolenko. அதனால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது அந்த அணி.
வேல்ஸ் அணி சுமார் 64 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 1958 உலகக் கோப்பையில் அந்த அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு பிரேசில் அணிக்கு எதிராக காலிறுதியில் தோல்வியை தழுவி இருந்தது அந்த அணி. இப்போது இரண்டாவது முறையாக இந்த தொடரில் விளையாடி தகுதி பெற்றுள்ளது.