லிஸ்பன்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தன் நாட்டுக்காக நேற்று நடைபெற்ற போட்டியில் கோல் பதிவு செய்தார். அதை கண்டு அவரது தாயார் டோலோரஸ் அவிரோ (Dolores Aveiro) ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார்.
ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான UEFA நேஷன்ஸ் லீக் 2022-23 தொடரில் லீக் ஆட்டங்கள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 55 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் ரொனால்டோ விளையாடி வரும் போர்ச்சுகல் அணி குரூப் A2-வில் இடம் பெற்றுள்ளது. நேற்று லிஸ்பன் நகரில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. போர்ச்சுகல். இதில் ரொனால்டோ 2 கோல்களை பதிவு செய்தார்.
சர்வதேச அரங்கில் போர்ச்சுகல் நாட்டுக்காக அவர் பதிவு செய்த 116 மற்றும் 117-வது கோல்களாக இது அமைந்தது. இந்த போட்டியில் 35 மற்றும் 39-வது நிமிடங்களில் அவர் கோல் பதிவு செய்திருந்தார். இந்தப் போட்டியை நேரில் கண்ட அவரது தாயார் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியுள்ளார். அது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
போர்ச்சுகல் அணி இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் 1 டிரா செய்துள்ளது. அந்த அணி இடம்பெற்றுள்ள பிரிவில் முதலிடத்தில் உள்ளது.