ஸ்டாவங்கிர்: நார்வே சதுரங்கப் போட்டிக்கான தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். மொத்தம் 50 நகர்வுகளில் கார்ல்சனை அவர் வென்றுள்ளார்.
நார்வே நாட்டின் ஸ்டாவங்கிர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மொத்தம் 10 கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு வீரரும் மற்றவர்களுடன் விளையாட வேண்டும். இதில், அதிக புள்ளிகள் பெறுபவர்கள் வெற்றியாளர்கள்.
52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் இப்போது புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தம் 10 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார். இந்தத் தொடரில் அவர் மேலும் 4 சுற்றுகள் பங்கேற்பார்.
இரண்டாவது இடத்தில் 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் மற்ற வீரர்கள் உள்ளனர். கிளாசிக்கல் பிரிவில் மூன்று வெற்றிகளுடன் தொடங்கியிருந்தார் ஆனந்த். முன்னதாக, கார்ல்சனை மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா கடந்த மாதம் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 10-ஆம் தேதியன்று இந்தத் தொடரின் கடைசி போட்டி நடைபெறவுள்ளது. அந்த முடிவின்போது அதிக புள்ளிகளை பெறுபவர்களுக்கு விருது கொடுக்கப்படும்.