சென்னை: பொறியியல், மேலாண்மைப் படிப்புகளுக்கான கட்டணங்களை மறுவரையறை செய்து ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் நாட்டில் 4,000-க்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக 2015-ல் ஒய்வுபெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் அறிக்கையில், “உட்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்கள் ஊதியம், பராமரிப்பு செலவுகள் அடிப்படையில்தான் கல்விக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.44 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை இருக்கலாம்” என பரிந்துரை செய்தது.
அதேநேரம், தமிழகம், தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்கள், தனியார் கல்லூரிகளுக்கு குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தன.
அதை ஏற்று, கல்விக் கட்டணத்தை மறுவரையறை செய்வதற்காக 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நீதிபதி கிருஷ்ணா தலைமையில் தேசிய கட்டணக் குழுவை ஏஐசிடிஇ அமைத்தது.
அந்தக் குழு தற்போது தனதுபரிந்துரைகளைச் சமர்பித்துள்ளது. அதில், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம், ஆசிரியர்களின் ஊதியம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விவரம் வருமாறு: பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளுக்கு (3 ஆண்டு) குறைந்தபட்சம் ரூ.67,900, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 40,900 ஆண்டு கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளநிலைப் பொறியியல் படிப்புக்கு (4 ஆண்டு) குறைந்தது ரூ.79,600, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 89,800, முதுநிலைப் பொறியியல் படிப்புக்கு (2 ஆண்டு) குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 41,200, அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 4,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, ஹோட்டல் மேலாண்மையில் 3 ஆண்டு பட்டயப் படிப்புக்கு ரூ.67,900 முதல் ரூ.1 லட்சத்து47,800, 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ரூ.81,300 முதல் ரூ.1 லட்சத்து91,200, 2 ஆண்டு முதுநிலைப் படிப்புக்கு ரூ.1 லட்சத்து 83,400முதல் ரூ.3 லட்சத்து 78,400 கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம்.
இதேபோல, எம்சிஏ படிப்புக்கு குறைந்தபட்சம் ரூ.88,500, அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 94,100, எம்பிஏ படிப்புக்கு ரூ.85,000 முதல் ரூ.1 லட்சத்து 95,200 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.அதன்படி, உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ.57,700 முதல் ரூ.1 லட்சத்து 37,000, பேராசிரியர்களுக்கு ரூ.1 லட்சத்து 44,200 முதல் ரூ.2 லட்சத்து 60,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, கல்லூரிகள் கட்டணத்தை குறைக்கக் கூடாது.
சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
இந்தப் பரிந்துரைகளை வரும்கல்வி ஆண்டில் அமல்படுத்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக்கட்டண விகிதம் ஏற்கெனவே இருந்ததைவிட 20 முதல் 25 சதவீதம் வரை கூடுதலாகும்.
ஏஐசிடிஇ பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு விரைவில் புதிய கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, கல்லூரிகள் கட்டணத்தை குறைக்கக் கூடாது.