சென்னை: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்(ஸ்டெம்) ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களை சென்றடையும் வகையில் ஸ்டெம் திட்டத்தின் கீழ் கோடைகால பயிற்சி வகுப்பை சென்னை ஐஐடி ஜூன் 20(நேற்று) முதல் 25-ம் தேதி வரை நடத்துகிறது.
அந்த வகையில் இந்த பயிற்சி வகுப்பை சென்னை ஐஐடி-ல், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, மின்சார பொறியியல் துறை பேராசிரியர்கள் ஆர்.சாரதி, அன்பரசு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில் அரியலூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் மொய்யாமொழி கூறும்போது, “சென்னை ஐஐடி-ல் 6நாட்கள் நடைபெறும் பயிற்சிவகுப்பு மாணவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இதில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்களில் ஒருவர் சென்னை ஐஐடி-ல் பட்டம் பெற்றாலே அது எங்களுக்குப் பெருமை தான்.
வருங்காலத்தில் கல்வி, தொழில், வேலை என எதுவாக இருந்தாலும் சரி, அது 80 சதவீதம் கணிதம், அறிவியலை சார்ந்துதான் இருக்கப்போகிறது. இனி ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களை ஸ்டெம் திட்டத்தில் இணைப்பது தான் எங்களது இலக்கு” என்று கூறினார்.
ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பேசும்போது, “இளம் மாணவர்களை ஊக்குவித்து, ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும் சிந்திக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்டுவதுதான் இந்த பயிற்சி வகுப்பின் நோக்கம். இந்த பயிற்சியின் பாடத்திட்டம் 70 சதவீதம் நடைமுறைக் கூறுகளையும், மீதமுள்ள 30 சதவீதம் தொழில், கல்வி ஆகிய துறைகளில் நிபுணர்களாக விளங்குவோரின் ஊக்கமளிக்கும் உரைகளையும் உள்ளடக்கியதாகும்” என்றார்.