இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான தனது ‘விருப்ப’ ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
எதிர்வரும் அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியில் விளையாட உள்ள வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போது எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.
அதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சில வீரர்களின் பெயர் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் தினேஷ் கார்த்திக். இப்போது அவர் இருக்கும் அபார ஃபார்ம் தான் அதற்கு காரணம்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான தனது விருப்ப ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார் அவர்.
இர்பான் பதான் விரும்பும் ஆடும் லெவன்: கே.எல். ராகுல், ரோகித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், சாஹல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
“பல்வேறு வெரைட்டியான ஷாட்களை ஆடும் திறன் படைத்த தினேஷ் கார்த்திக் மாதிரியான ஒரு வீரரை காண்பது அரிதினும் அரிதான ஒன்று. சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் திறன் படைத்தவர் அவர். ஃபினிஷர் ரோலையும் திறம்பட செய்வார். அதுதான் மிகவும் முக்கியம். பந்த் சிறந்த வீரர் தான். இருந்தாலும் அவர் ஒரே விதத்தில் அவுட்டாகி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது” என தெரிவித்துள்ளார் பதான்.