துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார் அவர்.
37 வயதான தினேஷ் கார்த்திக் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அணியின் தேர்வாளர்களின் வீரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் அவர். அதற்கு காரணம் அவரது அபார பேட்டிங் திறன். 15-வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இப்போது ஐசிசி பேட்டிங் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் 4 இன்னிங்ஸ் விளையாடி 92 ரன்களை எடுத்திருந்தார் அவர். அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.62. இந்த தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இருப்பதும் அவர் தான். இந்நிலையில், டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். இதை ஐசிசி உறுதி செய்துள்ளது.
வரும் நாட்களில் அவர் விளையாட உள்ள டி20 போட்டிகள் மூலம் பேட்டிங் தரவரிசையில் அவர் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ரெகுலராக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை செய்வார். இந்திய அணி வரும் நாட்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசிய கோப்பை போன்ற டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.